Sunday, September 7, 2008

ச‌ட‌ல‌ங்க‌ளிலிருந்து எழும் உயிர்

எழுதுவதால் ஆற்றிக்கொள்ள முடியுமா?
சின‌ம் கொண்டு எழுதுவ‌தால்,
அழுது அரற்றி எழுதுவதால்
பிரிந்த உயிர்கள் உடலுக்குள் மீள்வதில்லை.

மூன்று பிஞ்சுகளின் சடலங்களிலிருந்து தான்
என் ஒவ்வொரு நொடியும் வெறி கொண்டு சுவாசிக்கிறது
இர‌க்க‌மற்ற அமைப்பின் சுவாசத்தை அடியோடு நிறுத்த.
எனக்கு தோள் கொடுக்க உடைத்து
செதுக்கி எடுக்கிறேன் எனக்கானவர்களை.

துய‌ர‌த்தை எழுதுவ‌து க‌ண்ணீர் துளிக‌ளுக்காக‌ அல்ல
‌திறந்து படித்து கண்ணீர் சிந்தாதீர்கள்
மூன்று பிஞ்சுக‌ளின் ப‌சி பொறும‌லையும்
அவ‌ர்க‌ளை பெற்ற‌ வ‌யிற்றில் பிற‌ண்டை
க‌ட்டிக்கொண்ட‌ ஜெய‌ல‌ட்சுமியின் க‌த‌ற‌லையும்
கேட்க‌ ம‌றுக்கும் உங்க‌ள் செவிக‌ள் அரிந்தெறியப்படட்டும்.

தூங்கிய‌ குழந்தைகள் இனி அழாதிருக்க
இறுதி தாலாட்டை பாடிவிட்டாள்.
இனி ப‌சியால் என்றும் அழாம‌லிருக்க கிணற்றில் வீசிவிட்டாள்.
எறியப்பட்ட குழந்தைகள் உறக்கத்தோடு மூழ்கிப் போயின‌
அடி ஆழ‌த்தை நோக்கி.
எறிந்தவள் கண்ணீரில் புதைந்தாள்.

எல்லாம் முடிந்தது
தனக்கு மட்டும் மரணம் ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌வ‌ள்
த‌ன் பிண‌த்தை தானே எடுத்தெழுந்தாள்.


படித்துவிட்டு கண்ணீர் சிந்தாதீர்கள்!
உங்க‌ள் நேர்மையின் முனையால்
அற்ப‌த்த‌னங்க‌ளில் மூழ்கும் இத‌யத்தை
இரத்தம் வழிந்தோட கீறுங்கள்
சீல் பிடித்த‌ இர‌த்த‌ம் வெளியேறி கொட்ட‌ட்டும்.
அற்ப‌த்த‌ன‌மும் பிழைப்புவாத‌மும் மடிந்தொழியட்டும்
கீற‌ல்க‌ள் வ‌டுக்க‌ளாய் படியும்
வ‌டுக்க‌ள் வேத‌னை த‌ரும்
அதிலிருந்து அது மீள‌ட்டும்.

அவ‌மான‌த்தாலும், துய‌ரத்தா‌லும்
பிணைக்கப்பட்ட வாழ்க்கை
வேண்டாத பிண்டமாய்
கழிவென‌ ஒதுக்கப்பட்ட உயிருக்கான வாழ்க்கை
காத்திருக்கிறது குரூரத்தோடு அவளுக்காக.

விடிய‌ற்காலை.
நீதியின் ஆட்சியை நிலை நாட்ட
ஓடோடி வந்த நீதியின் காவலர்கள் முன் விசாரணை
கார‌ண‌ம் கேட்டார்க‌ள்
ப‌சி என்றாள்.
அத‌ற்கு மேல் எடுத்துரைக்க‌ ஒன்றுமில்லை அவ‌ளிட‌ம்.

விசார‌ணை முடிந்த‌‌து குற்றம் நிரூபிக்கப்பட்டது
நீதி நிலை நாட்ட‌ப்ப‌ட்ட‌து
வேசைத்த‌ன‌த்தின் க‌ற்பும் காக்க‌ப்ப‌ட்ட‌து.

க‌ல்யாணியின் பிள்ளைக்காக‌ வாதாடிய‌வ‌ர்க‌ள்
வ‌சன்‌ம் எழுதிய‌வ‌ர்க‌ள்
நாடாள‌ போய் விட‌
கோடிகள்,லட்சங்கள்,கார்கள்,பங்களாக்கள்
அவர்களிடம் நிலை கொண்டிருக்கிறது
கல்யாணிக‌ள் ம‌ட்டும் ஓடிக்கொண்டிருக்கிறார்க‌ள்
கிண‌றுகளைத் தேடி...

குடித்த‌ மூன்று உயிர்க‌ளை நினைத்து அழுகிற‌து கிண‌று
வெடித்து மேல் எழுகிற‌து நீர்
பாறாங்கல்லை தூக்கிப்போட்டும்
சலனமற்று கிடக்கிறது ச‌மூகம்.

சுக்ர‌ன்

குறிப்பு
பார்க்க 5ம் தேதி வெளியான‌ அணைத்து த‌மிழ் ஆங்கில‌ நாளித‌ழ்க‌ள்.