Wednesday, August 13, 2008

சொட்டுச்சொட்டாய் க‌ட‌க்கும் இர‌வு

ஓர் இரவு,
ஒன்றுமில்லாத நிர்மூலமாய் வானம்
வெளுத்த‌ காத‌லியை விட்டு விலகிய‌ வின் மீன்கள்

நில‌வு,
க‌ருத்த‌ அவ‌ன் இர‌வுக‌ளின் ந‌டுவே ஒரு பொட்டு.

ஒலிய‌ற்று அலைக‌ள் அடித்து ஒதுக்கிய‌ க‌ரை
ஓர‌மாய் ம‌ர‌ம்.

ம‌ர‌ம்
எங்கும் விரவியிருக்கும் பால் ஒளி
த‌ன‌க்குள் ம‌ட்டும் த‌டுத்திட்ட‌ ப‌டி படிந்த‌‌ இருள்

ப‌ட‌ர்ந்த‌ வெள்ளொளியின் ந‌டுவே ஒரு சொட்டு
‌‌இருளின் ந‌டுவே அவன்

அமைதியை குலைத்துச்செல்லும் குத்தீட்டியாய்
வெளியெங்கும் ஊடுருவி துலைக்கும் கூறிய பார்வை

காட்டுத்தேவ‌தைக‌ள் தூர‌த்தில் ஒலியெழுப்ப‌
மூடிய கோட்டைக்குள் ந‌க‌ர்த்த‌ முடியாத‌ நொடிக‌ளை
த‌ள்ளிக்கொண்டு நிற்கிற‌து அவ‌ள‌து நினைவுக‌ள்

விழித்திருக்கிறான் கன‌‌மான‌ கால‌த்தை‌ நோக்கி
இருவ‌ருக்குமிடையே மெல்லிய‌ காற்று ம‌ட்டுமே
க‌டக்கக்கூடும் இனி வரும் நொடிகளில்.

தேங்கிய‌ நீரில் உதி‌ர்ந்த இலைகளின் சலனத்தில்
எழும் சுழிக‌ளை ச‌ரி செய்து தூங்கிய‌து நீர்

தூங்கிய‌து நீர் ம‌ட்டுமே

தூங்காமல் இறுக்கிக் கடக்கிறது அவ‌ன‌து தடி‌த்த இர‌வுக‌ள்

நாளை வ‌ரும் பெரும் ப‌டை நோக்கி
அவ‌னை கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக
ஒரு துளியும் சொட்டாமல்‌ க‌ட‌த்துகிறான்.

ம‌ண்ணில் முனையும்
பிடியில் கையும் வெட்டிச்செதுக்கி உட்புகுகிற‌து அவ‌ன் சின‌ம்

விம்ம‌ல்க‌ளுட‌ன் அவ‌ள‌து இர‌வுக‌ள்

கடந்த ஜாமம் அய‌ர்ந்துற‌ங்க இறங்கி வரும் பின் இரவு.
இவையாவும் அறியாத
உறக்கத்தில் அந்த நெடு ம‌ர‌த்து அனில்.